கோலாலம்பூர், டிசம்பர்-19, மாமன்னர், ஜோகூர் இடைக்கால சுல்தான், பிரதமர் ஆகிய மூவரையும் சிறுமைப்படுத்தும் வகையில் அண்மையில் டிக் டோக்கில் வீடியோ வெளியிட்டதற்காக, Rayyan Wong என்ற டிக் டோக் கணக்கின் உரிமையாளர் கைதாகியுள்ளார்.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய் ( Tan Sri Razarudin Husain) அதனை உறுதிப்படுத்தினார்.
அவ்விவகாரம் தொடர்பில் MCMC எனப்படும் தொடர்பு-பல்லூடக ஆணையம் முன்னதாக புகார் செய்திருந்தது.
அது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் 22 வயது சந்தேக நபர் கைதானார்.
அவ்வீடியோவின் உள்ளடக்கம், ஆட்சியாளர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டி, பொது அமைதியையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் நோக்கிலானது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபரின் கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக IGP சொன்னார்.
சுல்தான் இப்ராஹிம், துங்கு இஸ்மாயில் மற்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் ஜோகூரில் மதிய உணவுண்ட சீன உணவகத்தின் ஹலால் சான்றிதழ் குறித்து, Rayyan Wong சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டிருந்தார்.