பெஷாவார், பிப் 10- உலகில் அறிவியலும் தொழில்நுட்பமும் என்னதான் வளர்ந்துவிட்டாலும், அதிகப்படியான மூடநம்பிக்கைகளிலிருந்து இன்னும் பலர் மீளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில், ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி பெண் ஒருவரின் தலையில் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைக்குத் தாயான அந்தப் பெண், நான்காவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கின்றார்.
எனினும், அடுத்து பிறக்கபோகும் குழந்தையும் பெண் என்றால் வீட்டைவிட்டு துரத்திவிடுவேன் என கணவர் மிரட்டியதைத் தொடர்ந்து, சாமியாரைக் காணச் சென்ற அப்பெண்ணுக்கு சாங்கியம் எனக் கூறி தலையில் ஆணி அடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணின் தலையிலிருந்து 5 செண்டிமிட்டர் நீளமுள்ள ஆணி பாதுகாப்பாக அகற்றப்பட்டது. ஆணியின் முனை சிறிது மூளையில் பட்டிருந்தாலும் பெரும் பாதிப்பு உண்டாகி இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட சாமியாரைப் பெஷாவர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.