பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 27 – கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில், இந்திய சமூகம் மற்றும் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் குழுவினருக்கு எதிராக, ஆறு இந்திய அரசு சாரா அமைப்புகள் போலீஸ் புகார்களை வழங்கின.
கடந்த வாரம் சமூக ஊடக தளமான டிக்டோக்கில் தொடர்ச்சியான நேரடி அமர்வுகளில், மலேசியாவில் தங்களை இந்தியர்கள் என்று குறிப்பிடும் தமிழர்கள், விபச்சாரிகளாக இருந்த தாய்மார்களுக்குப் பிறந்தவர்கள் என்று கூறி, இந்தியர்கள் பயனற்றவர்கள், வீடற்றவர்கள், தைரியம் இல்லாதவர்கள், விபச்சாரிகளாகவே இருந்தால் நல்லது என்ற கலந்துரையாடல் தொடர்பாக இந்த புகார்கள் எழுந்துள்ளன.
இந்திய சமூகத்தைக் களங்கப்படுத்தும் குழுவை களைவதற்கான வழிகளைக் கண்டறிய ம.இ.கா இளைஞர்கள் அதன் வழக்கறிஞர்களுடன் இந்த விவகாரத்தைப் பற்றி விவாதிக்கும் என கூட்டரசு பிரதேச ம.இ.கா இளைஞரணித் தலைவர் எஸ். சிவ சங்கர் கூறினார்.
‘இந்த செயலை செய்பவர்கள் யார் அல்லது அவர்களின் நோக்கம் என்ன என்பது தங்களுக்குத் தெரியாது. இந்திய சமூகம் இங்கு சிறுபான்மையினராக உள்ளோம். இவர்கள் முரண்பாட்டை உருவாக்கி நம்மை சிறுமைப்படுத்த விரும்புகிறார்கள். ஆகையால், காவல்துறைதான் அதனை விசாரிக்க வேண்டும்’ என குளோபல் மனித உரிமைகள் கூட்டமைப்பு செயலாளர் எஸ்.அன்பழகன் வலியுறுத்தினார்.
அதேவேளையில், இக்குழுவினர் இந்துக்கள் மற்றும் இந்தியர்களின் மதத்தையும், தாய்மார்களையும் அவர்களது சந்ததியினரையும் இழிவுபடுத்தும் தவறான சொற்களைப் பயன்படுத்தினர். எல்லை மீறிய செயலை செய்த அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைச் செயலாளர் எம். மகேந்திரனும் தெரிவித்தார்.
மலேசிய மலையாளி சங்கம், மலேசிய தெலுங்கு சங்கம், கூட்டரசு பிரதேச மற்றும் சிலாங்கூர் மாநில குஜராத்தி சங்கம் உட்பட இதர இந்திய அரசு சாரா சங்கங்களும் இணைந்து, இந்த குழுவினர் மீது புகார் அளித்துள்ளனர்.