
சமூக அகப்பக்கங்களில் பகிரப்படும் ஆபாச பதிவுகளின் சட்ட விதிகள் குறித்து விவாதிக்க, தொடர்பு இலக்கவியல் அமைச்சு சம்பந்தப்பட்ட வலைத்தள வழங்குநர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
அத்தகைய உள்ளடக்கங்கள் தடை செய்யப்பட்டிருப்பதை, டெலிகிராம், வாட்ஸஅப், முகநூல் போன்ற நிறுவனங்கள் புரிந்து கொள்ளவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அத்தளங்களை பயன்படுத்துபவர் மீது வழக்குத் தொடர முடியும் என்பதை நினைவுறுத்தவும் அம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, தொடர்பு இலக்கவியல் துணையனைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
ஆபாச உள்ளடக்கங்களை பதிவேற்றம் செய்வோரிடம் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது எனவும் துணையமைச்சர் எச்சரித்தார்.
ஆபாச உள்ளடக்கத்தை அனுப்புவோருக்கு எதிராக, தொடர்பு பல்லூடக சட்டத்தின் 233-வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அது குறித்த புகார்கள் அதிகம் பெறப்படுவதால், அனைத்து சமூக வலைத்தள சேவை வழங்குநர்களும் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.
அண்மையில், பெண் ஒருவர் டெலிகிராமில் ஆபாச படங்களை பகிர்ந்த சம்பவம் தொடர்பில், கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் இவ்வாறு கருத்துரைத்தார்.