சென்னை, ஆகஸ்ட் -13 – தாய்லாந்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்பட்ட சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சந்தேகத்திற்குரியக் கூடைகளைத் திறந்துப் பார்த்தால், ஆப்பிரிக்க கருங்குரங்கு, அரிய வகையான 4 கண் ஆமைகள், சிவப்புக் கால் ஆமைகள், பைத்தான் வகை பச்சை நிற மலைப்பாம்புகள், அரிய வகை பறக்கும் அணில்கள் என இதுவரை கண்டிராத, பெயர் கேட்டிராத 22 உயிரினங்கள் உள்ளிருந்தன.
வனவிலங்குகள் மீதான குற்றச்செயல் கட்டுப்பாட்டுப் பிரிவு வரவழைக்கப்பட்டு, கடத்திக் கொண்டு வரப்பட்ட உயிரினங்கள் அடையாளம் காணப்பட்டன.
அவற்றைக் கடத்திக் கொண்டு வந்த ஆடவனைக் கைதுச் செய்த விமான நிலைய போலீஸ், அப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக வெளியில் காத்திருந்த அவனது சகாவையும் பிடித்துச் சென்றது.
கடத்திக் கொண்டு வந்த நபர், சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றவர் என தெரிய வந்தது.
ஆப்பிரிக்க கருங்குரங்கும், பறக்கும் அணில்களும் இந்தியாவுக்குள் கடத்திக் கொண்டு வரப்பட்டது இதுவே முதன் முறையென தெரிவிக்கப்பட்டது.