பூச்சோங், செப்டம்பர் -6, போலீசால் தேடப்படும் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவன் என நம்பப்படும் ஆப்பிரிக்க நாட்டு ஆடவன் சிலாங்கூர் பூச்சோங்கில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பூச்சோங் ஜெயாவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்றிரவு போலீசாருக்கும் அவனுக்கும் இடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் அவன் உயிரிழந்தான்.
Menara KLH-சின் 9-வது மாடியிலிருந்த சந்தேக நபரின் வீட்டை முற்றுகையிட்ட போலீஸ், சரணடையுமாறு அவனை அறிவுறுத்தியது.
தனியாக இருந்தவன், போலீசுடன் ஒத்துழைக்காமல் ரிவால்வர் துப்பாக்கியால் போலீசை நோக்கி இரு முறை சுட்டான்.
இதனால் போலீசும் திரும்பி சுட வேண்டியதாயிற்று என, புக்கிட் அமான் தெரிவித்தது.
அவ்வீட்டிலிருந்து 2 பாராங் கத்திகள், போலி கார் பதிவு எண் பட்டை, கள்ள நோட்டுகள் வைக்கப்பட்ட பை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவனிடமிருந்த ஐநா அகதிகள் அட்டையும் போலியானதே.
சுட்டுக் கொல்லப்பட்டவன், 2018 முதல் நாட்டில் சுடும் ஆயுதங்கள் ஏந்தி கொள்ளையிட்டு வரும் ஆப்பிரிக்க கும்பலைச் சேர்ந்தவன் ஆவான்.
அவனது சகா ஒருவன் ஆகஸ்ட் 20-ஆம் தேதி சுபாங் ஜெயாவில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
மேலும் மூவர், ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஜப்பானிய நாட்டவரை கொள்ளையிட முயன்ற போது கைதாகினர்.