Latestமலேசியா

ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கான CFO சான்றிதழ் விரைவுப்படுத்தப்படும்

ஆயர் தாவார், ஜனவரி-7, பேராக், ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் பழையக் கட்டடம் நேற்று தீக்கிரையான நிலையில், அதன் புதியக் கட்டடத்துக்கான CFO எனும் குடியிருப்புச் சான்றிதழ் கிடைப்பது விரைவுப்படுத்தப்படும்.

சுகாதாரம், பயனீட்டாளர் விவகாரம், தேசிய ஒற்றுமை மற்றும் மனிதவள துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் அவ்வாறு கூறியுள்ளார்.

CFO சான்றிதழை விரைவுப்படுத்தும் விவகாரம், ஆட்சிக் குழுக் கூட்டத்தின் போது பேராக் மந்திரி பெசாரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்படும்;

அதோடு, மஞ்சோங் நகராண்மைக் கழகத்துடனும் பேசப்படுமென்றார் அவர்.

பொதுப் பணித் துறையான JKR நிர்ணயித்த விதிமுறைகளுக்கு ஏற்ப அக்கட்டடம் கட்டப்பட்டிருப்பதால், அந்த CFO சான்றிதழை வாங்குவது பிரச்னையாக இருக்காது;

2025/2026 புதியக் கல்வி தவணை தொடங்கிய சில வாரங்களுக்குள் அந்த குடியிருப்புச் சான்றிதழ் பெறப்பட்டு விடுமென, சிவநேசன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அதுவரை மாணவர்கள், PdPR எனப்படும் வீட்டிலிருந்தே கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றார் அவர்.

பள்ளிக்குத் தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் இதர வசதிகள் அடையாளம் காணப்பட்டு, மாற்று பொருட்களுக்கு நிதி தேடப்படும்.

அதே சமயம், பள்ளி மாணவர்களுக்கு பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ Ngeh Koo Ham சார்பில் தலா 200 ரிங்கிட், புதியப் பள்ளி தவணை தொடக்க உதவி நிதியாக வழங்கப்படும் என சிவநேசன் மேலும் கூறினார்.

3 வகுப்பறைகள், அலுவலகம், ஆசிரியர் அறை, தலைமையாசிரியர் அறை உள்ளிட்டவை அடங்கிய அப்பள்ளியின் புதிய இணைக் கட்டடம், கடந்தாண்டு மத்தியில் முழுமைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

1993-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழையக் கட்டடம் நேற்றையத் தீயில் 80 விழுக்காடு அழிந்தது.

1938-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் 32 மாணவர்கள் பயில்கின்றனர்; 13 ஆசிரியர்கள் வேலை செய்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!