Latestமலேசியா

ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமாக சாப்பிட்டு விட்டு, 400 ரிங்கிட் மட்டும் செலுத்திய நபர் ; வலுக்கும் கண்டனம்

கோத்தா கினபாலு, செப்டம்பர் 4 – உணவகங்கள் கூடுதல் கட்டணம் விதிப்பதாக இதற்கு முன் பல முறை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், குடும்பத்தோடு உணவு உண்டுவிட்டு கட்டணம் செலுத்த முடியாமல், ஏமாற்றி சென்ற நபர் ஒருவரின் செயல் வைரலாகி கடும் கண்டனத்தை பெற்று வருகிறது.

சபா, ஜெசல்டன் பாயின்ட் கடல்வாழ் உணவகத்தில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆகஸ்ட்டு 27-ஆம் தேதி, குடும்பத்தோடு, அந்த உணவகத்திற்கு சென்ற நபர் ஒருவர், ஒரு கிலோகிராம் எடையிலான Lobster இறால், 800 கிராம் குரூப்பர் வகை மீன், நான்கு பெரிய நண்டுகள், கனவாய் உட்பட கடல் உணவு வகைகளை இரசித்து உண்டுள்ளார். பழச்சாறு பானங்களையும் அவர்கள் அருந்தியுள்ளனர்.

அதற்காக, உணவக உரிமையாளர் அவருக்கு மொத்தம் ஆயிரத்து 102 ரிங்கிட் கட்டணம் விதித்தார். எனினும், அந்த விலை மிகவும் அதிகம் எனவும், தாம் சாப்பிட்ட உணவிற்கு 500 ரிங்கிட்டிற்கும் குறைவான கட்டணம் மட்டுமே விதிக்க முடியுமென வாதிட்ட அந்நபர், தம்மிடம் இருந்த வெறும் 400 ரிங்கிட்டை மட்டும் செலுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட உணகவகத்தின் உரிமையாளர், போலீஸ் புகார் செய்ததை தொடர்ந்து, அவரது கடையை செப்டம்பர் இரண்டாம் தேதி சோதனையிட்ட உள்நாட்டு வாணிப, தொழிலியல், வாழ்க்கை செலவீன அமைச்சின் அதிகாரிகள், உணவகத் தரப்பில் தவறோதும் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அச்சம்பவம் தொடர்பில் வைரலாகி இருக்கும் “பில்” இணையவாசிகளிடையே விவாதத்தை தூண்டியுள்ளது.

விலை அதிகம் என்றால் அந்த உணவகத்திற்கு சென்றிருக்க கூடாது. அதனை விடுத்து, குடும்பத்தோடு சென்று நன்கு உண்டு விட்டு, கட்டணம் செலுத்தாமல் போவது ஏமாற்று வேலை என அவர்கள் சாடி வருகின்றனர்.

இந்நிலையில், அவ்விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வுக் காண முன்வருமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு, உணவக உரிமையாளர் அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!