
ஜொகூர் பாரு, செப்டம்பர் 11 – கடந்த ஜுனில், ஆயுதம் ஏந்தி கொள்ளையிட்ட மூன்று சம்பவங்கள் தொடர்பில், மூன்று நண்பர்களுக்கு எதிராக இன்று ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும், அதில் 25 வயது முஹமட் சாபிக் அஜ்மான் எனும் ஆடவன் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரிய வேளை; 37 வயது ஜெப்ரி மிசாடியும், 35 வயது கிறிஸ்தோபர் மோன் லோபெசும் அந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டனர்.
அம்மூவரும், இன்னும் கைதுச் செய்யப்படாமல் இருக்கும் இதர மூவருடன் இணைந்து, பாராங் கத்தியை காட்டி மிரட்டி, மூன்று வெவ்வேறு நபர்களிடம் கொள்ளையிட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
ஜூன் 16-ஆம் தேதி, அதிகாலை மணி 6.40 வாக்கில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அம்மூவரையும் தலா எட்டாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் இன்று விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இவ்வழக்கு விசாரணை அக்டோபர் 11-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.