Latestமலேசியா

பாராங் கத்தி கும்பலின் அட்டகாசம்; வயதான தம்பதி காயங்களுடன் உயிர் தப்பினர்

அலோர் காஜா, பிப்ரவரி-19 மலாக்கா அலோர் காஜாவில் பாராங் கத்தியேந்திய நால்வர் கும்பல் வீடு புகுந்ததில், வயதான தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சிம்பாங் அம்பாட், கம்போங் பிரிசுவில் சனிக்கிழமை இரவு 11.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

திடீரென ஏதோ சத்தம் கேட்டு, அத்தம்பதியின் மகள் தனது அறையின் கதவைத் திறந்த போது, ஆயுதமேந்திய கும்பல் அவரை நோக்கி பாய முயற்சித்திருக்கிறது. சுதாகரித்துக் கொண்ட அப்பெண் மின்னல் வேகத்தில் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்.

பின்னர் தகவல் கிடைத்து போலீஸ் வீட்டுக்கு விரைந்து விசாரணை நடத்தியதில், கொள்ளைக் கும்பல் ஒரு வெள்ளி நிற ஹோண்டா சிட்டி காரில் வந்திறங்கியது தெரிய வந்தது. எனினும் காரின் பதிவு எண்ணை உறுதிப்படுத்த முடியவில்லை.

பாராங் கத்தி பட்டு முதுகில் காயமடைந்த 60 வயது கணவனும், கையில் காயமுற்ற 70 வயது மனைவியும் சிகிச்சைக்காக அலோர் காஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தருகே போலீஸ் சோதனை மேற்கொண்டதில் 200 மீட்டர் தொலைவில் காலி வீட்டின் புதரில் ஒளிந்துக் கொண்டிருந்த மர்ம நபர் சிக்கினான்.

அவனைப் பிடிப்பதற்கு போலீஸ் போராட வேண்டியிருந்ததாக அலோர் காஜா மாவட்ட போலிஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் அர்ஷாட் அபு சொன்னார்.

அவனிடம் போலிசார் விசாரணை நடத்தி, பரிசோதித்ததில் அவ்வீட்டில் இருந்து திருடிய துணிப் பையுடன், அவனின் துணி மற்றும் பாராங் கத்தியை பறிமுதல் செய்தனர்.

அவன் ஏற்கனவே 17 முறை போதைப் பொருள் குற்றத்திற்காகவும், 5 முறை இதர குற்றச்செயல்களுக்காகவும் கைதானவன் என்பதும் அம்பலமாகியுள்ளது; போதாக் குறைக்கு அவனிடம் நடத்தப்பட தொடக்கக் கட்ட சிறுநீர் பரிசோதனையில் அவன் ஷாபு வகை போதைப் பொருளை உட்கொண்டதும் உறுதியானது.

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட ஏதுவாக அலோர் காஜா காவல் தலைமையகத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்ட ஆடவன், கம்பி நீட்டிய தனது இதர 3 நண்பர்களுடன் வீடு புகுந்து திருடியதை ஒப்புக் கொண்டான்.

தப்பியோடிய மூவரைத் தீவிரமாக தேடி வரும் போலிஸ், அந்த ஆயுதமேந்தியக் கொள்ளையை குற்றவியல் சட்டத்தின் 394-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!