
கோலாலம்பூர், ஏப்ரல்-9, நாட்டிலுள்ள இந்து ஆலயங்களை உட்படுத்தியப் பிரச்னைகளுக்கு ஆணிவேரே நாம் தான்; ஆனால் எதற்கெடுத்தாலும் மற்றவர்களையே குறை சொல்லி பழகி விட்டோம்.
இது மாறாத வரை நம் பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வில்லை என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு விவகாரங்களுகான அதிகாரி ஷண்முகம் மூக்கன் நினைவுறுத்தியுள்ளார்.
ஆலயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சக்தி நம்மிடம் உள்ளது.
அனைத்தையும் முறையாகப் பின்பற்றினால் அதனை சாத்தியமாக்கலாம்; அதை விடுத்து செய்யபவர்களையும் சகட்டுமேனிக்கு வசைப்பாடினால் நாம் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
இவர் செய்வார் அவர் செய்வார் என கைக் காட்டினோமே ஒழிய, ஒற்றுமையாக இருக்கத் தவறிவிட்டோம்.
ஒற்றுமையாக இருந்து செயல்பட்டிருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம்.
தவிர, இச்சமுதாயம் நடந்து முடிந்தவற்றையே பேசிக் கொண்டிருக்கிறது; நடந்தவற்றை யாராலும் மாற்ற முடியாது; இனி நடப்பவையே முக்கியம்.
மலேசிய இந்து சங்கம் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அவசரக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசிய போது ஷண்முகம் அவ்வாறு சொன்னார்.
இன்னொன்று, நம் ஆலயங்களை உட்படுத்திய நடப்பு விவகாரங்கள் ஒரே நாளில் தீர்க்கப்படக் கூடியவை அல்ல; பிரதமரின் சிறப்பு அதிகாரி என்பதால் எடுத்த எடுப்பிலேயே அவற்றுக்கு தீர்வுக் காண முடியுமென்பதும் இயலாத காரியம்.
படிப்படியாகத் தான் நாம் செல்ல வேண்டும்; அதற்கு இந்த இந்து சங்கத்தின் அவசரக் கூட்டம் முதல் படியாகட்டும் என்றார் அவர்.
அக்கூட்டத்தின் இறுதியில், இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்த மகஜர் ஷண்முகம் மூக்கனிடம் வழங்கப்பட்டது.