அக்டோபர்-12, மலாக்கா மஸ்ஜித் தானாவில் ஆளுயர அராபைமா (Arapaima) மீன்களைப் பிடிக்கும் முயற்சியின் போது, அவை திமிறியதில் மலேசிய மீன்வளத் துறையின் 5 பணியாளர்கள் காயமடைந்தனர்.
அங்கு கைவிடப்பட்ட வீட்டொன்றின் கீழ் தேங்கியிருந்த நீரில் invasive species என்றழைக்கப்படும் ஆக்கிரமிப்பு இனங்கள் அல்லது அயல் உயிரினமான அம்மீன்களைப் பிடிக்க வெள்ளிக்கிழமை காலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
இருவருக்கு மூச்சுத் திணறலும் கால் முட்டியில் வீக்கமும் ஏற்பட்டது.
எஞ்சிய மூவருக்கு நெஞ்சிலும் முட்டியிலும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்த ஐவரும் அலோர் காஜா மருத்துவனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
எனினும், அம்மீன்களைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட 7 மணி நேர போராட்டத்தில் 3 அராபைமா மீன்கள் சிக்கின.
ஒவ்வொன்றும் 200 கிலோ கிராம் எடையில், 2.7 மீட்டர் நீளத்தில் இருந்தன.
அம்மீன்களுக்கு கிராம மக்களும், அருகிலுள்ள உணவக வாடிக்கையாளர்களும் தீனிப் போட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
அம்மீன்களை வளர்ப்பது சட்டப்படி குற்றம் என தெரிந்ததும், அதன் உரிமையாளர் தானாகவே முன்வந்து அவற்றை மீன்வளத் துறையிடம் ஒப்படைத்தார்.
இனிமேலும் அப்படி செய்யக் கூடாதென அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
அம்மூன்று ராட்சத மீன்களும் Zoo Negara கொண்டுச் செல்லப்பட்டன.