
கோலாலம்பூர், மே 25 – இவ்வாண்டு இதுவரை அடையாள ஆவணங்கள் இல்லாத 20,615 பேரை குடிநுழைவுத்துறை கைது செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail தெரிவித்தார். இவ்வாண்டு ஜனவரி 1 ஆம்தேதி தொடங்கி மே மாதம் 15ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்ட 3,060 நடவடிக்கைகளில் ஆவணமின்றி இருந்த 8,065 குடியேறிகளும் 125 முதலாளிகளும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். இதுதவிர பல்வேறு குடிநுழைவு விதிகளை மீறியதற்காக நாட்டின் நுழைவு மையங்களில் 12,550 பேர் கைது செய்யப்பட்டனர். தங்களது விசா வசதிகளை தவறாக பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு எதிராக உள்துறை அமைச்சு எடுத்த நடவடிக்கை குறித்து Jerai நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்தபோது Saifuddin இதனைத் தெரிவித்தார்.