ஆவிகள்’ நடமாட்டமா? ; மக்களின் அச்சத்தை போக்க ரோந்து பணியை முடுக்கிவிட்டுள்ளது போலீஸ்

ஜகார்த்தா, ஜூலை 11 – மத்திய ஜாவாவிலுள்ள, லாசெம் மாவட்ட மக்கள், “ஆவி” பயத்தில் உரைந்துள்ளனர்.
இரவு நேரங்களில் அப்பகுதியில் ஆவிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படும் வேளை ; கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டுக் கதவு இரவில் மர்மமான முறையில் தட்டப்பட்டதாக கூறப்படுவது, மக்களிடையே அச்சத்தை இன்னமும் மேலோங்கச் செய்துள்ளது.
“கடந்த வியாழக்கிழமை, நள்ளிரவு மணி சரியாக 12 வாக்கில் எனது வீட்டின் கதவு தட்டப்பட்டது. அப்பொழுது வீட்டில் இருந்த நானும் எனது பிள்ளையும் அச்சத்தில் வெளியே செல்லவில்லை” என அந்நபர் கூறியுள்ளார்.
அதே சமயம், கடந்த செவ்வாய்க்கிழமை, அண்டை வீட்டின் முன்புறம் ஆவியைக் கண்டதாக மற்றொரு கிராமவாசி தெரிவித்தார்.
“ஆவியை கண்டவுடன், எனது மகன் அதனை துறத்திச் சென்றான், ஆனால், வாழைத் தோப்பில் புகுந்து அது மாயமானது” என தனது அனுபவத்தை ஆடவர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.
இந்த ஆவிகள் நடமாட்டம் தொடர்பான காணொளி, சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் இரு இடங்களில் தமது தரப்பு ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, லாசெம் போலீஸ் தலைவர் கூறியுள்ளார்.
எனினும், அச்சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள காணொளி போலியானது எனவும், அதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.