சிட்னி, செப்டம்பர்-3, 2022-ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய குரங்கம்மை (mpox) நோயை ஆறே மாதங்களில் ஏறக்குறைய முழுவதுமாகக் கட்டுக்குள் கொண்டு வந்த ஆஸ்திரேலியா, தற்போது மீண்டுமொரு சவாலை எதிர்நோக்கியுள்ளது.
திடீரென அந்நாட்டில் mpox நோய் பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் மட்டுமே 179 சம்பவங்கள் பதிவாகின; இதையடுத்து இவ்வாண்டில் இதுவரை 400 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டு விட்டன.
இதுவரை மொத்தமாக பதிவுச் செய்யப்பட்ட 550-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஒருவர் மட்டுமே பெண்; ஆக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆடவர்கள் மத்தியிலேயே அது அதிகம் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் ஓரினச் சேர்க்ககையாளர்களை குறி வைத்து தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2022 கடைசியிலேயே mpox நோயிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டு விட்ட நிலையில், இவ்வாண்டு தொடக்கம் வரை அது நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
நோய் பரவும் வாய்ப்பதிகமுள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசித் திட்டம், பாதுகாப்பான உடலுறவுவை ஊக்குவிக்கும் இயக்கத்தைத் தீவிரப்படுத்தியது, மற்றும் பொது விழிப்புணர்வை அதிகரித்தது போன்றவற்றால், கடந்தாண்டு மொத்தமாகவே வெறும் 26 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவைப் போல் திடீர் நோய் அதிகரிப்பு சாத்தியத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டுமென உலக நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக மேலும் ஆபத்தான, பெருந்தொற்று அபாயத்தை உருவாக்கக் கூடிய புதிய நோய் திரிபுகள் பரவலாமென ஐயுறப்படுகிறது.