
புக்கிட் ஜாலில், ஏப்ரல்-6- இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கமே நேற்றிரவு மெய்மறந்துபோனது.
தொடக்கத்தில் மழைக் கொட்டினாலும், இளையராஜாவின் தீவிர இரசிகர்களை அது கொஞ்சமும் பாதிக்கவில்லை.
Raaja Rhapsody என்ற நிகழ்ச்சியின் பெயருக்கு ஏற்றாற் போலவே, அவரின் இசையில் இரவாப் புகழ்பெற்ற 40 பாடல்கள் மற்றும் அட்டகாசமான BGM பின்னணி இசையால் அரங்கமே அதிர்ந்து. 80-ஆம் ஆண்டுகள் தொடங்கி அவரின் இசையில் நீங்கா புகழ் பெற்ற பாடல்கள் நிகழ்ச்சியில் பாடப்பட்டன.
இளையராஜாவுடன் கார்த்திக், SPB சரண், யுகேந்திரன் மலேசியா வாசுதேவன், மதுபாலகிருஷ்ணன் போன்ற பாடகர்களும் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். குறிப்பாக இதுவரை இல்லாத புதுமையாக இரசிகர்கள் ஏற்கனவே தேர்வு செய்த பாடல்கள் மேடையில் பாடப்பட்டன.
தவிர, மறந்த சகாப்தங்களான பாடகர் SP பாலசுப்ரமணியம், நடிகர் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு tribute இசை அஞ்சலியும் செலுத்தப்பட்டது. சென்னை மற்றும் ஹாங்கேரி நாட்டின் புடாபேஸ்ட் நகரிலிருந்து வந்திருந்த 70 இசைக்கலைஞர்கள் இசைவிருந்து படைத்தனர்.
லண்டனில் சிம்ஃபொனி இசை நிகழ்ச்சியை முடித்த பிறகு இளையராஜா நடத்தும் இசைக் கச்சேரி இதுவாகும். அதோடு மலேசியாவில் இளையராஜா நடத்தும் மூன்றாவது நேரடி இசை நிகழ்ச்சி இதுவாகும்.
கிட்டத்தட்ட 4 மணி நேரங்களாக தனது இசையால் ஒட்டுமொத்த அரங்கையும் இசைஞானி கட்டிப் போட்டார்.
ஆம்பத்தில் பெய்த மழை, நிகழ்ச்சி சற்று தாமதமாகத் தொடங்கியது, அவ்வப்போது ஒலிப்பெருக்கியில் சிறிய கோளாறு என என ஆங்காங்ஙே சிறு சிறு குறைகள் இருந்தாலும், சுமார் 10,000 இரசிகர்களும் திருப்திப்படும் அளவுக்கு இசைமழையை இசைஞானி அள்ளி வழங்கினார்.
நிகழ்ச்சி முடிந்து அரங்கை விட்டு வெளியே வந்த இரசிகர்களின் முகத்தில் கண்ட சந்தோஷமே அதற்கு சான்று. இந்த இசை நிகழ்ச்சி அவருக்கே ஒரு புதிய அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.