கோலாலம்பூர், மார்ச் 2 – இடியுடன் கூடிய கனமழையால் பயந்து கடைக்குள் புகுந்த தெருநாயை விரட்டாமல், அதற்கு அடைக்கலம் தந்த கடை பணியாளரின் பரிவு குணம், சமூக வலைத்தளவாசிகளின் பாராட்டினைப் பெற்றுள்ளது.
இடத்தின் விபரத்தை குறிப்பிடாமால் 99 Speedmart கடைக்குள் , நாய்களுக்கான உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில், சம்பந்தப்பட்ட நாய் நிம்மதியாக தூங்கும் படத்தை , வாடிக்கையாளர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
கடைக்குள் நாய் இருப்பது குறித்து அங்கிருந்த பணியாளரிடம் வினவியபோது, இடிக்கு பயந்து அந்த பிராணி கடைக்குள் அடைக்கலம் பெற்றிருப்பதாகக் கூறியதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு அந்த நாய் கடைக்குள் புகுவது இது முதல் முறையல்ல எனவும் தெரிய வந்தது.
வீட்டிற்கு முன் தெருநாய் வந்தாலே அடித்து விரட்டும் இக்காலத்தில் , அந்த நாய் தற்காலிகமாக ஒதுங்க இடம் கொடுத்த நல்ல மனசுக்காரரை வலைத்தளவாசிகள் பரவலாக பாராட்டியுள்ளனர்.