கோலாலம்பூர், டிசம்பர் 12 – இடைநிலைப்பள்ளிகளில் பெருகி வரும் கட்டொழுங்கு பிரச்சனைகளைக் களைய இந்திய ஆலோசகர்கள் பள்ளியில் நியமிக்கப்பட வேண்டும் என்று மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் கல்வி மேம்பாட்டு மற்றும் நலன்புரிச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக நலன்களுக்கு இந்திய ஆலோசகர்கள் வழங்கும் பங்களிப்பு இன்றியமையாதது.
கலாச்சார புரிதல் மற்றும் மொழித் திறன் கொண்ட ஆலோசகர்கள் மாணவர்களின் உணர்ச்சி தேவைகளை அறிந்து அவர்களை முறையாக கையாள முடியும் என அதன் தலைவர் வெற்றிவேலன் தெரிவித்தார்.
இது கல்வி, சமூக, மற்றும் நற்சிந்தனை வளர்ச்சியின் அடித்தளமாகச் செயல்படும் நிலையில், தகுதிமிக்க இந்திய வழிகாட்டிகளின் சேவையால், மாணவர்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்களை உருவாக்க முடியும் என்றார், அவர்.
இந்த கோரிக்கையை, கடந்த டிசம்பர் 8ஆம் திகதி, மலேசிய கல்வி அமைச்சிடம் முறையாக முன்வைத்துள்ளதாகவும், அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.