சிபு, ஏப்ரல்-10, சரவாக் சிபுவில் இணையத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு மோசடிக்கு ஆளாகி 41,870 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார் இளம் பெண்ணொருவர்.
நீர் வடிகலன் (water filter) நிறுவனமொன்றின் முகவராக வேலை செய்து வரும் 20 வயதுப் பெண்ணே பாதிக்கப்பட்டவராவார்.
ஒவ்வொரு பணிக்கும் கமிஷன் வழங்கும் பகுதி நேர வேலை இருப்பதாக facebook-கில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, அவர் அதற்கு விண்ணப்பித்திருக்கிறார்.
‘வேலையில் சேர்ந்து’ முதல் பணியை வெற்றிகரமாக முடித்ததில் அப்பெண்ணுக்கு 100 ரிங்கிட் கமிஷன் கிடைத்தது.
இதனால் அவருக்கு நம்பிக்கை அதிகரிக்க, அடுத்துத் தரப்பட்ட பணியையும் ‘கச்சிதமாகச்’ செய்திருக்கிறார்.
அதாவது, 10 வெவ்வேறு ஹோட்டல்களுக்கு முன்பதிவு செய்யும் பணி வழங்கப்பட்டதில், அதைச் செய்து முடித்து, 5 உள்ளூர் வங்கிக் கணக்குகளில் தன் பணத்தில் மொத்தம் 41,870 ரிங்கிட்டைப் போட்டிருக்கிறார்.
பணம் செலுத்திய பிறகு, சந்தேக நபரிடம் தான் போட்ட முதலையும் கமிஷன் தொகையையும் கேட்ட போது, அந்தப் பக்கத்தில் இருந்து சாக்குப் போக்கு மட்டுமே பதிலாக வந்துள்ளது.
இதையடுத்தே தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து அப்பெண் போலீசில் புகார் செய்திருக்கிறார்.