கோலாலம்பூர், டிசம்பர்-21,சிறார்களை உட்படுத்திய ஆபாச படத் தயாரிப்பு, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயல்களைத் துடைத்தொழிக்க, மலேசியப் போலீஸ் அமெரிக்க மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறையான FBI-யுடன் ஒத்துழைத்து வருகிறது.
அவ்விஷயத்தில் இணையக் குற்றவாளிகளுக்கு அதிநவீனத் தொழில்நுட்பங்கள் பெரிதும் கைக்கொடுக்கின்றன.
இதனால் அதிகாரத் தரப்பின் கண்களில் மண்ணைத் தூவி எளிதில் அவர்கள் தப்பி விடுகின்றனர்.
இது மலேசியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பெரும் சவால் தான் FBI கூறியது.
நவீன தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டால், சிறார் மற்றும் பதின்ம வயதினரை உட்படுத்திய sextortion எனும் இன்னொரு தீங்கும் பரவலாக நிகழுகிறது.
Sextortion என்பது தங்களது அந்தரங்க அல்லது நிர்வாணப் படங்களையோ வீடியோக்களையோ பகிராவிட்டால், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட புகைப்பைடங்களை வைரலாக்கி விடுவோம் என மிரட்டிப் பணிய வைப்பதாகும்.
கையில் சிக்கும் சிறார்களிடம் முதலில் வேலையைக் காட்டும் அக்கும்பல், பின்னர் அவர்களின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களையும் தொந்தரவுச் செய்கின்றனர்.
இதுபோன்ற மிரட்டல்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு தரப்படுவது மிகவும் அவசியமாகும்.
இந்நிலையில், சிறார்களுக்கு எதிரான குற்றங்களை அனைத்துலக அளவில் ஆக்கப்பூவமாக வேரறுக்கும் முயற்சியாக, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் மீதான அனைத்துலகப் பணிக்குழுவையும் FBI அமைத்துள்ளது.
அதில் மலேசியப் போலீஸ் உட்பட 60 நாடுகளைச் சேர்ந்த சட்ட அமுலாகத் தரப்புகள், தனிநபர்கள் என 90 அங்கத்தினர்கள் இருக்கின்றனர்.
சிறார்களைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் படங்களை தயாரிப்பது, அவற்றை இணையத்தில் விற்பது போன்ற குற்றச்செயல்கள் நாட்டில் பரவலாக நடந்து வருவது குறித்த NST-யின் சிறப்புச் செய்தி வரிசையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.