ஸ்ரீ ஆலாம், ஆகஸ்ட்-16 – வெறும் ஒரு மணி நேரத்தில் கணிசமான இலாபத்தைப் பார்க்கலாம் எனக் கூறி மேற்கொள்ளப்பட்ட பகுதி நேர வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கி, ஜோகூர் ஸ்ரீ ஆலாமைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் 201,866 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
முதலீட்டு தொகையின் அடிப்படையில் வெறும் ஒரு மணி நேரத்தில் 6 முதல் 15 விழுக்காடு வரை இலாபம் கிடைக்கும் என, இணையம் வாயிலாக அவர் நம்ப வைக்கப்பட்டுள்ளார்.
கொடுக்கப்படும் இணையத் தளங்களை கிளிக் செய்து, அவற்றின் views-களை அதிகரிக்கச் செய்வதே அந்த பகுதி நேர வேலையாகும்.
அப்படி முதல் வேலையைக் கச்சிதமாக செய்து முடித்ததும், அவர் போட்ட முதலீடான 30,000 ரிங்கிட்டையும், அதற்கு கமிஷன் தொகையாக 565 ரிங்கிட்டையும் அவர் ஒரே நாளில் பெற்றுள்ளார்.
இதனால் சந்தோஷமடைந்தவர், முதலீட்டுத் தொகையை அதிகரிக்கும் ஆர்வத்தில் மொத்த சேமிப்புப் பணத்தையும் காலியாக்கி, அது போதாதென்று குடும்பத்தினர் நண்பர்கள் ஆகியோரிடமும் கடன் வாங்கியுள்ளார்.
திரட்டியப் பணத்தை ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை, 19 தடவையாக 27 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் அவர் போட்டுள்ளார்.
ஆனால் சொன்ன படி கமிஷன் வரவில்லை; காரணம் கேட்டால் வேலை இன்னும் முடியவில்லை என பதில் வந்துள்ளது.
அப்போதும் நடப்பதை அறியாத அப்பையன், மேலும் பணத்தைப் போட்டு ‘வேலையை’ முடிப்பதில் மும்முரமாக இருந்துள்ளான்.
பணம் போடுமாறு நச்சரிப்பு தொடர்ந்த பிறகே, தான் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து அப்பையன் போலீசில் புகார் செய்துள்ளான்.