தைப்பிங், செப்டம்பர் -17, பேராக் தைப்பிங்கைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற பெண் வங்கியாளர் இணைய மோசடிக்கு ஆளாகி 14 லட்சம் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையம் (MCMC) மற்றும் போலீஸ் எனக் கூறி வந்த கைப்பேசி அழைப்புகளை நம்பியதால், 65 வயது அம்மாதுவுக்கு அந்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11-ல் MCMC அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்த பெண் அழைத்து, பாதிக்கப்பட்ட மாதுவின் வங்கி அட்டை சட்டவிரோதப் பணப்பரிமாற்ற நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி பயமுறுத்தியுள்ளார்.
சற்று நேரத்தில் திரங்கானு போலீஸ் எனக் கூறிக் கொண்டவருக்கு அழைப்பு மாற்றப்பட்டது.
இதையடுத்து பணத்தை மாற்றுவதற்காக 3 வெவ்வேறு வங்கிகளில் கணக்குகளைத் திறக்க அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
புதிய வங்கி அட்டைகளை ஒரு கடித உறையில் போட்டு, கொடுக்கப்பட்ட முகவரியில் புல்தரையில் விட்டுச் செல்லுமாறும் அம்மாது பணிக்கப்பட்டார்.
எடுக்கப்படும் பணம், விசாரணைகள் முடிந்ததும் திருப்பி ஒப்படைக்கப்படுமென்றும் சந்தேக நபர்கள் நம்ப வைத்துள்ளனர்.
ஆனால், ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 11 வரை தனது வங்கிக் கணக்குகளிலிருந்து மொத்தமாக 14 லட்சம் ரிங்கிட் மாயமான போதே, தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து அவர் போலுலீசில் புகார் செய்தார்.