ஜோகூர் பாரு, ஏப்ரல் 15 – ஜோகூர் பாருவை சேர்ந்த மின்னணு நிறுவனத்தின் விற்பனை மேலாளர் ஒருவர், ஆன்லைன் முதலீட்டு மோசடியை நம்பி, ஐந்து லட்சத்து 77 ஆயிரத்து 912 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
WeChat செயலி மூலம் அறிமுகமான எமி எனும் பெண் ஒருவரை நம்பி, அந்த 58 வயது நபர் மோசடியில் சிக்கியதாக, ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் துணைத் தலைவர், லிம் ஜிட் ஹூய் தெரிவித்தார்.
அந்த பெண், அப்பெஸ்ட் (Upbest) செயலியை பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்யுமாறும், முதலீடு செய்த 60 நிமிடங்களில், மிக குறுகிய நேரத்தில் இலாபகரமான வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் சம்பந்தப்பட்ட நபரை ஊக்குவித்துள்ளார்.
அதனை நம்பி, உள்நாட்டு வங்கி கணக்குகளுக்கு, ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொகையை பணமாற்றம் செய்த அந்நபர், முதலில் அதற்கான இலாபத்தை ஈட்டியுள்ளார்.
எனினும், இலாப பணத்தை எடுக்க முடியாமல் போகவே, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் போலீஸ் புகார் செய்ததாக, லிம் ஜிட் ஹூய் சொன்னார்.