
டெலிகிராம் (Telegram) செயலிக்கு எதிராக, அமல்படுத்த ஏதுவான, பல்வேறு நடவடிக்கைகளை, MCMC – தொடர்பு பல்லூடக ஆணையம் ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, அந்த சமூக ஊடகத்திற்கு, கட்டுப்பாடுகளை விதிக்கும் நடவடிக்கையும் அதில் அடங்கும்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிச் செய்வதோடு, டெலிகிராம் பயனர்களின் பாதுகாப்பை பேண அதுபோன்ற நடவடிக்கை மிகவும் அவசியம் என, தொடர்பு பல்லூடக ஆணையத்தின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரி ஜுல்கர்னாயின் முஹமட் யாசின் தெரிவித்தார்.
டெலிகிராமில் மோசடி நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் குற்றச்செயல்கள் அதிகம் பதிவுச் செய்யப்படும் தளங்களில், முதல் ஐந்து இடங்களுக்கு டெலிகிராம் முன்னேறியுள்ளது.
இதற்கு முன், 2019-ஆம் ஆண்டுக்கும் 2020-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அது 11-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இணைய மோசடி உட்பட பல்வேறு இணையப் பாதுகாப்பு சிக்கல்கள் தொடர்பில், அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்த டெலிகிராம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த வாரம் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாயிட் ஹமிடி, தொடர்பு, இலக்கவியல் அமைச்சை கேட்டுக் கொண்டார்.
அரசியல் தணிக்கை நடவடிக்கைகளில் பங்கேற்க டெலிகிராம் விரும்பவில்லை என்பதால் தொடர்பு இலக்கவியல் அமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என, டெலிகிராம் செய்தித் தொடர்பாளர் ரெமி வான் தெரிவித்ததை அடுத்து துணைப் பிரதமர் அவ்வாறு கூறியிருந்தார்.