ஜோகூர் பாரு, நவ 18 – இணைய மோசடிக் கும்பலினால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் பெண் நிர்வாகி ஒருவர் 940,000 ரிங்கிட்டிற்கு மேல் இழந்தார். 53 வயதுடைய அந்த பெண் முதலீட்டுத் திட்டத்தில் விரைவில் அதிக வருமானம் கிடைக்கும் என்ற வாக்குறுதியோடு அடையாளம் தெரியாத ஒருவரால் வாட்சாப் குழுமத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
இந்த திட்டத்தினால் கவரப்பட்ட அந்த பெண் வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் தம் வரை 943,250 ரிங்கிட் பணத்தை பட்டுவாடா செய்துள்ளார்.
இந்த பணத்திற்கு ஆறு லட்சம் ரிங்கிட் லாபாம் கிடைத்துள்ளதாக அப்பெண்ணிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லாப வருமானத்தை மீட்டுக்கொள்ளவதாக இருந்தால் மேலும் கூடுதல் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என அந்த பெண்ணுக்கு தெரிவிக்கப்பட்டதால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து போலீசில் புகார் செய்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ M.குமார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தண்டனை சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே வேளையில் விரைவில் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் முதலீடு திட்டங்களால் கவரப்பட்டு பணத்தை இழந்துவிட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.