
ஜோகூர் பாரு, ஏப் 10 – வாட்ஸ்அப் செயலி மூலம் இரட்டிப்பு லாபம் தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட ஆன்லைன் பங்கு முதலீட்டு சலுகையால் பொறியியலாளர் ஒருவர் 571,100 ரிங்கிட் இழந்தார். பாதிக்கப்பட்ட 44 வயதுடைய ஆடவர் இது குறித்து புகார் செய்துள்ளதை ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Superintendan விக்டர் கணேசன் உறுதிப்படுத்தினார்.
குறுகிய காலத்தில் அதிக லாபத்தை வழங்கும் என வாக்குறுதி அளித்த இரண்டு தனித்தனி முதலீடுகளால் தாம் மோசடிக்கு உள்ளானதாக அந்த பொறியியலாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நுவீன் நிதி சமூகத்தின் பிரதிநிதியிடமிருந்து முதலீட்டு வாய்ப்பு தொடர்பான வாட்ஸ்அப் செய்தி வந்ததைத் தொடர்ந்து அந்த ஆடவர் பணத்தை ஏமாந்துள்ளார்.
ஜனவரி 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம்தேதிவரை ஒன்பது வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 23 முறை மொத்தம் 469,100. ரிங்கிட்டை அந்த ஆடவர் பட்டுவாடா செய்துள்ளார்.
இருப்பினும், முதலீட்டு லாபத்தை திரும்பப் பெற விரும்பியபோது, மேலும் கூடுதல் பணம் செலுத்துமாறு கேட்கப்பட்டதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்த பொறியியலாளர் புகார் செய்துள்ளார் என விக்டர் கணேசன் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
சிசிஐடியின் செமாக் மியூல் தளத்தின் மூலம் நடத்தப்பட்ட தொடக்கக் கட்ட விசாரணைகளில், அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட 13 கணக்குகளில் ஏழில் முதலீட்டு மோசடி தொடர்பான புகார்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.