
கோலாலம்பூர், ஏப்ரல்-15 பிரதமராக இருந்த காலத்தில் இந்தியச் சமூகத்தின் குரல்களையும் அவர்களின் தேவைகளையும் ஒருபோதும் ஒதுக்காதவர் மறைந்த துன் அப்துல்லா அஹ்மட் படாவி.
ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவ்வாறு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
‘பாக் லா’ என நாட்டு மக்களால் பாசத்தோடு அழைக்கப்பட்ட துன் அப்துல்லா, அனைவரையும் அரவணைத்துச் சென்றார்;
நியாயமானக் கொள்கைகளோடு, அனைத்தையும் திறந்த மனதோடு கேட்கும் பக்குவத்தால் சிறந்து விளங்கினார்.
மிதவாதம், வெளிப்படைத்தன்மை, நல்லிணக்கம் அடிப்படையில் அரசு நிர்வாகத்தை அறிமுகப்படுத்திய துன் அப்துல்லா, சவாமிக்க காலக்கட்டத்தில் நாட்டின் வலுவான அடித்தளத்திற்கு வித்திட்டார்.
அன்பிலும் பண்பிலும் நிதானத்திலும் நெறிமுறைமிக்க தலைமைத்துவத்திலும் சிறந்து விளங்கிய பெருந்தலைவர் அவர்.
நாட்டுக்கு அவராற்றிய பங்கு அளப்பரியது; காலத்திற்கும் அவர் பெயரும் சேவையும் மலேசியர்களால் நினைவுக் கூறப்படும்.
அன்னாரின் மறைவால் துயரில் வாடும் அவரின் குடும்பத்துக்கு ம.இ.கா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
முதுமைக் காரணமாக தனது 85-ஆவது வயதில் துன் அப்துல்லா நேற்றிரவு 7.10 மணியளவில் காலமானார்.
2003 அக்டோபர் தொடர்ங்கி 2009 ஏப்ரல் வரை நாட்டின் ஐந்தாவது பிரதமராக அவர் சேவையாற்றியுள்ளார்.