
ஐதராபாத் , பிப் 3 – இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான, கே.விஸ்வநாத் தனது 93-வது வயதில், வயது மூப்பு காரணமாக காலமானார்.
தெலுங்கு திரையுலகில் பல அற்புதமான படங்களை இயக்கியவரான இவர் பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, எனப் பல சமுக விஷயங்களை தன் படங்களின் மூலமாகப் பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.
இவர் இயக்கத்தில் ‘சங்கராபரணம்’, ‘ஸ்வாதிமுத்யம்’, ‘சாகரசங்கமம்’ உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை.
தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகியவை அவர் புகழ்பாடும் படங்களாகும்.
மேலும், தமிழில் ‘குருதிப்புனல்’, ‘முகவரி’, ‘யாரடி நீ மோகினி’, ‘லிங்கா’, ‘உத்தம வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும் இவர் 2017-ம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான ‘தாதாசாகெப் பால்கே’ விருதையும் பெற்றிருந்தார்.
இதனிடையே,இவரது இழப்பு, இந்திய திரையுலகை சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.