புது டெல்லி, ஆகஸ்ட்-22, இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைத் தருவிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மலேசியா புதுப்பித்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன் காலாவதியான அந்த MoU, பிரதமரின் இந்தியப் பயணத்தின் போது புதுப்பிக்கப்பட்டது.
ஆள் தருவிப்பு நடைமுறைகளை மேம்படுத்தி, தொழிலாளர் சுரண்டலைத் தடுக்கும் அம்சங்கள் அதில் இணைக்கப்பட்டிருப்பதாக, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் (Stevan Sim) தெரிவித்தார்.
ஆள் தருவிப்பு நடவடிக்கைகள் சட்டத்திற்குட்பட்டு, வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நேர்த்தியாக மேற்கொள்ளப்படுவதை இதன் மூலம் உறுதிச் செய்ய முடியுமென்றார் அவர்.
2014-ஆம் ஆண்டிலேயே அவ்வொப்பந்தம் காலாவதியான போதிலும், இந்த பத்தாண்டுகளில் சுமார் 160,000 இந்திய நாட்டு தொழிலாளர்கள், எந்தவோர் ஆள் சேர்ப்பு கொள்கைகளும் இல்லாமல் மலேசியாவுக்கு நுழைந்துள்ளனர்.
இவ்வேளையில், உயர் திறன் தொழில்துறைகளைத் தவிர்த்து, வெளிநாட்டு தொழிலாளர்களின் சேவை அதிகம் தேவைப்படும் துறைகளாக தோட்டத்தொழில், விவசாயம் ஆகியவை விளங்குகின்றன.
அவற்றுக்கு மொத்தமாக 85,000 வேலையாட்கள் தேவைப்படுவதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
உணவகம் மற்றும் முடிதிருத்தும் தொழில்களுக்கு ஏற்படுள்ள பற்றாக்குறையை சரிசெய்ய பேச்சுவார்த்தைகள் தொடருவதாகவும் அமைச்சர் சொன்னார்.