
கோலாலம்பூர், செப் 11 – இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவையும் இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டையும் வலுப்படுத்துவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருப்பதை மித்ரா சிறப்புக் குழுவின் தலைவரும் சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் வரவேற்றுள்ளார். நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இதுவொரு சிறந்த முடிவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு முன் இந்த முயற்சி குறித்து விரைவில் முழுமையான தகவல்களை பெறுவதற்கான நடவடிக்கையில் மித்ரா ஈடுபடும். இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் சமூக பொருளாதார மேம்பாடுகள் தொடர்பாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக கூடிய விரைவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சந்திப்பு நடத்தவிருப்பதாகவும் டத்தோ ரமணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.