
கோலாலம்பூர், ஆக 27 – இந்தியர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதிக்கும் பக்காத்தான் ஹராப்பானின் DAP, PKR கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை தவிர வேறு கட்சிகளுக்கு ஆதவளிக்க வாய்ப்பில்லை என நினைக்க வேண்டாம் என பினாங்கு முன்னாள் துணை முதல்வர் டாக்டர் ராமசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நினைவுறுத்துவதே தமது தற்போதைய நிலைப்பாடு என்று நேற்று கோலாலம்பூரில் இந்திய அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளுடன் நடந்த சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.
நான் அரசியல் கட்சி தொடங்குவதா அல்லது ஓர் இயக்கமாக செயல்படுவதா என்பதை பற்றி முடிவு செய்வதற்கு சில காலம் பிடிக்கும் எனக் கூறிய அவர் இந்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கூறும் எந்த கட்சியுடனும் இணைந்து வேலை செய்யத் தயார் என்றார் அவர்.
பாஸ்-பெர்சத்து கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டால் நமது சமய பின்பற்றுதலுக்கும் ஆலயங்களுக்கும் ஆபத்து நேரலாம் எனும் அச்சம் இந்தியர்களிடம் இருக்கிறது. ஆனால் அது நிரந்தரமாக இருக்கும் என சொல்ல முடியாது.
நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து இந்திய சமூகத்திடம் விளக்கவும் அவர்களின் வாக்குகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெளிவுபடுத்தவும் நாடளாவிய நிலையில் அவர்களோடு சந்திப்பு நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைக்கு மக்களை சந்தித்து நாட்டின் உண்மையான அரசியல் நிலவரத்தை விளக்கவுள்ளேன். நான் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதற்கு முக்கிய காரணமே சில கட்சிகள் தாம் நிறுத்தப்பட்டால் மலாய்க்காரர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என தெரிவித்ததால்தான் என்றார் ராமசாமி.
DAP கட்சியும் அதிகாரத்தில் இருந்தால் போதும் எனும் நிலைப்பாட்டோடு செயல்படுவதால் தாம் அக்கட்சியில் இனியும் நீடித்திருப்பது பொருத்தமில்லை எனக் கருதி வெளியேறியதாக ராமசாமி குறிப்பிட்டார்.