
குஜராத், ஏப்ரல்-8- இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வீட்டின் சமையலறைக்குள் சிங்கம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவு நேரத்தில் சமையலறையிலிருந்து சத்தம் வந்ததால், சந்தேகத்தில் சென்று பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
ஜன்னல் வழியாக நுழைந்ததாக நம்பப்படும் சிங்கமொன்று அங்கே அமர்ந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. பின்னர் உள்ளே குதித்து சமையலறையில் இரையேதும் உள்ளதா என தேடியது.
இதை அனைத்தையும் கைலாம்பு வெளிச்சத்தில் வீட்டுக்காரர்கள் கைப்பேசியில் பதிவுச் செய்தனர். எனினும் யாரையும் எதுவும் செய்யாமல் சிங்கம் வந்த வழியே எகிறிக் குதித்துத் திரும்பியது.
குஜராத்தில் காடழிப்பு நடவடிக்கைகளால் காடுகள் சுருங்கி, வேறு வழியின்றி சிங்கம் உள்ளிட்ட வன விலங்குகள் மக்களின் குடியிருப்புக் பகுதிகளில் நுழைவதாகக் கூறப்படுகிறது. சிங்கங்கள் தனியாகவும் சில நேரங்களில் கூட்டமாகவும் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடும் CCTV கேமரா பதிவுகளும் வைரலாகி வருகின்றன.