Latestமலேசியா

இந்தியாவின் IIT கிளை வளாகம் விரைவில் மலேசியாவில் திறக்கப்படும்- இந்திய தூதர் B.N ரெட்டி தகவல்

கோலாலம்பூர், செப் 10 – இந்தியாவின் பிரசித்தி பெற்ற தொழிற்நுட்ப கல்லூரியான IIT விரைவில் அதன் கிளை வளாகத்தை மலேசியாவில் திறக்கவிருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருவதாக மலேசியாவுக்கான இந்தியத் தூதர் B.N ரெட்டி தெரிவித்தார். ஏற்கனவே மலாக்காவில் மணிப்பால் மருத்துவ கல்லூரி வெற்றிகரமாக செயல்பட்டுவரும் இவ்வேளையில் உயர்க்கல்வித்துறையில் மலேசிய-இந்திய ஒத்துழைப்பின் மற்றொரு சகாப்தமாக இந்திய தொழிற்நுட்பக் கல்லூரியின் மலேசிய கிளை வளாகம் அமையும் என அவர் கூறினார். நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய -இந்திய அரச தந்திர உறவுகள் தொடங்கப்பட்ட 65-ஆம்ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது ரெட்டி இதனை தெரிவித்தார்.

அண்மையில் மலேசியா தனது 65-ஆவது தேசிய தினத்தையும் இந்தியா தனது 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையும் கொண்டாடிய இனிமையான நிகழ்வுகள் இன்னும் நமது மனங்களில் நிழாலாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்பும் வலுவடைந்திருப்பது மகிழச்சியை அளிப்பதாக ரெட்டி கூறினார். மலேசிய மற்றும் இந்தியாவுக்கிடையிலான பங்காளித்துவம் மேலும் முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் பங்காற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவுக்கு வருகை புரிந்தது மற்றும் இவ்வாண்டு ஜூன் மாதம் மலேசிய வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டதும் இருவழி ஒத்துழைப்பிற்கு புத்துயிரூட்டியதாகவும் பி.என் ரெட்டி சுட்டிக்காட்டினார்.

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர்
டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா மலேசிய – இந்திய நட்புறவு முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டத்தை அடைந்திருப்து குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். கலாச்சாரம், இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் விவசயா மூலப்பொருள் துறையிலும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டியுள்ளதையும் அவர் வலியுறுத்தினார். கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு தாம் மேற்கொண்ட வருகையின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெயசங்கருடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்திக்கொள்வது குறித்து பேச்சு நடத்தியதையும் சைபுடின் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வை மலேசியாவிலுள்ள இந்திய தொழில்துறை நிறுவனங்களின் அமைப்பு மற்றும் மலேசிய இந்திய வர்த்தக மன்றம் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தது. இந்திய தொழில்துறை நிறுவனங்கள் அமைப்பான CIIM மின் தலைவர் டத்தோ Umang Sharma , மலேசிய இந்திய வர்த்தக மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ குணா சிற்றம்பலம், வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி உட்பட அழைக்கப்பட்ட பல பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!