வாஷிங்டன், செப்டம்பர் -23 – இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சுமார் 300 பழங்காலப் பொருட்கள் மற்றும் சிற்பங்களை அமெரிக்கா திருப்பி ஒப்படைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது, அந்த 297 கலைப்பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன.
விரைவில் அவை இந்தியா வந்து சேருமென அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அந்த பண்பாட்டு கலைப்பொருட்கள் கி.மு. 2000 – கி.பி. 1900 இடையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவையாகும்.
அவற்றில் பெரும்பாலானவை கிழக்கு இந்தியாவில் சுடுமண்ணால் செய்யப்பட்டவை.
மற்றவை கல், உலோகம், மரக்கட்டை மற்றும் யானைத் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை.
இவ்வேளையில், அப்பழங்கால பொருள்களை திருப்பிக் கொடுத்த அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு மோடி தமது X பதிவில் நன்றித் தெரிவித்தார்.
மகத்தான கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் அவை.
பாரம்பரியத்தையும் வரலாற்றையும் பாதுகாக்கும் முயற்சிக்கு அப்பொருட்கள் தாயகம் வருவது அவசியமென்றார் அவர்.
2016-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக 578 பழங்கால பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது.