
மும்பை, ஏப் 7 – இந்தியாவில் மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 20 வயது கல்லூரி மாணவி தனது பிரியாவிடை உரையின் நடுவில் மயங்கி விழுந்து இறந்தார்.
ஆர்.ஜி. ஷிண்டே ( R.G .Shinde Kharat ) கல்லூரியில் இறுதியாண்டு பி.எஸ்.சி மாணவி வர்ஷா காரத் ( Varsha Kharat ) இறந்தவர் என அடையாளம் கூறப்பட்டது.
ஏப்ரல் 5ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் அந்த சம்பவத்தின் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிறிய காணொளியில், சேலை அணிந்திருந்த அவர் மேடையின் முன் நின்று தனது உரையை நிகழ்த்துவதைக் காட்டுகிறது.
அவர் சரிந்து விழுவதற்கு முன் தனது பார்வையாளர்களுடன் பேசிய, ஒரு லேசான தருணத்தை அந்த வீடியோவில் காணமுடிந்தது. வர்ஷா தரையில் விழுந்ததால் மாணவர்கள் மேடையை நோக்கி ஓடினார்கள். அவர் அருகிலுள்ள பரண்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மரணம் அடைந்த அந்த வர்ஷாவுக்கு இருதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்ததோடு , கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய இரத்த நாள அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் , அவர் தினசரி மருந்துகளை உட்கொண்டு வந்ததாக வர்ஷாவின் மாமாவை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவல் வெளியிட்டது.
வெள்ளிக்கிழமையன்று கல்லூரிக்கு செல்லும் அவசரத்தில் அவர் மருந்துகளை உட்கொள்ளவில்லையென Zilla Parishad கல்லூரியின் ஆசிரியை Dhanaji Kharat தெரிவித்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.