
தன்ஜோங் பியாய் , பிப் 2 , ஜொகூரிலிருந்து, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் அனைத்துலக நேரடி விமான வழித்தடங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜொகூர் மாநிலத்தின் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் நோக்கில் அத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
அது தொடர்பில், சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங்குடன் அண்மையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டதாக, மாநில சுற்றுலா, சுற்று சூழல், பாரம்பரியம் மற்றும் கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் கே.ரவின் குமார் தெரிவித்தார்.
செனாய் விமான நிலையத்திலிருந்து, இவ்வட்டாரத்திலுள்ள பல நாடுகளுக்கு நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் அந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
தற்சமயம் ஜொகூரிலிருந்து, தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன. அதனை, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் விரிவுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மஇகா இளைஞர் பிரிவு தலைவருமான ரவின் குமார் குறிப்பிட்டார்.