புத்ராஜெயா, மே-3, இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் MISI KESUMA – MITRA திட்டத்திற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 3 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கியிருப்பதை, மனிதவள அமைச்சர் Stevan Sim பெரிதும் வரவேற்றுள்ளார்.
HRD Corp வாயிலாக KESUMA என சுருக்கமாக அழைக்கப்படும் மனிதவள அமைச்சின் தலைமையில், நிதி அமைச்சு மற்றும் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான MITRA ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும்
திட்டங்களுக்கு, அந்நிதி பயன்படுத்தப்படும் என Stevan சொன்னார்.
தொழில்துறை மற்றும் நாட்டின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையிலான பயிற்சித் திட்டங்களுக்கு அவை முக்கியத்துவம் அளிக்கும் என்றார் அவர்.
KESUMA-வின் முப்பெரும் அடிப்படைக் கோட்பாடான தொழிலாளிகளின் நலன், திறன், உற்பத்தி ஆகிய அம்சங்களை அந்நோக்கம் பிரதிபலிக்கிறது.
இந்த MISI KESUMA-MITRA திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்படவிருக்கும் பயிற்சித் திட்டங்கள் குறித்த மேல் விவரங்கள், விரைவிலேயே அறிவிக்கப்படும் என Stevan Sim அறிக்கையொன்றில் கூறினார்.
அந்த 3 கோடி நிதி ஒதுக்கீடானது, இந்தியச் சமூகத்தை அரசாங்கம் ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்பதற்குத் தக்கச் சான்று என, MITRA சிறப்புப் பணிக்குழுவின் தலைவர் பி.பிரபாகரன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.