
கோலாலம்பூர், டிச 27 – இந்தியர் விவகாரங்களை கவனித்துக் கொள்ள, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரமேஷ் ராவ் , தமது நியமனத்தை தற்காத்திருக்கின்றார். மக்களுக்கு உதவி செய்வதில் சிறந்த பதிவினைத் தாம் கொண்டிருப்பதாக Pertubuhan Minda dan Sosial Prihatin எனப்படும் அரசாங்க சார்பற்ற அமைப்பின் தலைவருமான அவர் கூறினார்.
முன்னதாக, ரமேஷ் ராவின் நியமனத்தை கடுமையாக குறை கூறியிருந்த பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமி, அவரது நியமனம் இந்திய சமூகத்துக்கு நல்லதாக அமைவதைக் காட்டிலும் பாதிப்புகளையே அதிகம் கொண்டு வருமென கூறியிருந்தார். அந்த குறை கூறல்களுக்கு பதிலளித்த ரமேஷ் ராவ், சாஹிட் ஹமிடியும், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கும் , தமது ஆற்றல் குறித்து நன்கு அறிவர் என குறிப்பிட்டார்.
இவ்வேளையில், ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ், தமது கடமைகளை ஆற்ற வாய்ப்பினைத் தருமாறும் அவர் கேட்டுக் கொண்டார். தாம் இந்நாட்டில் இந்தியர் சமூகத்தை உருமாற்றும் திட்டங்களை கொண்டிருப்பதாகக் கூறினார். ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளில் இந்தியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் , தொழில் ரீதியில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு சமூகத்தினராக திகழ்கின்றனர்.
அதேபோன்று மலேசியாவிலும் இந்திய சமூகத்தை நிபுணத்துவ சமூகமாக உருமாற்றும் இலக்கினை தாம் கொண்டிருப்பதாக ரமேஷ் ராவ் குறிப்பிட்டார். இதனிடையே, தாம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது குறித்து கருத்துரைத்த ரமேஷ் ராவ், அது பழைய விவகாரம் எனவும், அதற்கு 2014- இல் தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் கூறினார்.