கோலாலம்பூர், டிசம்பர் 31 – 2025ஆம் ஆண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நலமும் வளமும் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று ம.இ.காவின் தலைவர் டான் ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
கல்வி மட்டுமே இந்திய சமுதாயத்தின் மீட்சிக்கான பாதை எனக் கூறி, அதனை முன்னிறுத்தி ம.இ.கா கல்வி மறுமலர்ச்சியில் தொடர்ந்து முனைவு காட்டி வருவதாகக் கூறினார்.
இதன் வழியாக ம.இ.காவின் கல்விக் கரமான எம்.ஐ.இடி மூலம், டேஃப் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அனைத்துலக தரத்திலான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் உருவாகியுள்ளன என்றார் அவர்.
கெடாவில் மட்டும் செயல்பட்டு வருகின்ற ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், விரைவில் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் நிறுவிட ம.இ.கா முயன்று வரும் நற்செய்தியையும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தருமான டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்துச் செய்தியுடன் அறிவித்திருக்கிறார்.
இந்த வளர்ச்சிகளுடன், வர்த்தக முனைவு, சேமிப்பு மற்றும் திட்டமிட்ட வாழ்க்கை முறைகளுக்கும் முன்னுரிமை வழங்கி இணைந்து பயணிக்க வேண்டும் என்றார் அவர்.
2025ஆம் ஆண்டில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை மலர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.