
கோலாலம்பூர், நவ 7- இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு மித்ரா மூலம் பங்காற்றிவரும் மித்ரா சிறப்பு பணிக்குழு தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் இஸாம் பின் இசா பாராட்டை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்திய சமூகத்தினரிடையே மித்ரா மீது இப்போது புதியதொரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் மித்ராவின் சிறப்பு பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்திற்கு நன்மைகளை கொண்டு வருவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக முகமட் இஸாம் சுட்டிக்காட்டினார்.
மித்ரா திட்டமிட்ட வகையில் செயல்படுவதால் அதன் தோற்றம் இந்தியர்களிடையே மட்டுமின்றி இந்நாட்டிலுள்ள இதர சமூகத்தினர் மத்தியிலும் நப்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக தம்பின் அம்னோ டிவிசன் தலைவருமான முகமட் இஸாம் தெரிவித்தார்.
மித்ராவின் திட்டங்கள் B40 மக்களுக்கு உதவும் வகையில் இருப்பதால் டத்தோ ரமணன் மற்றும் அவரது தலைமையிலான மித்ரா சிறப்பு பணிக்குழு உறுப்பினர்களுக்கும் இந்த வேளையில் நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாக ஞாயிற்றுக்கிழமையன்று தம்பின் நாடாளுமன்றத்தின் தீபாவளி உதவி வழங்கும் நிகழ்வை தொடக்கி வைத்தபோது முகமட் இஸாம் தெரிவித்தார்.
மித்ரா 72 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தலா ஒரு லட்சம் ரிங்கிட் ஒதுக்கியிருந்தது. அந்த வகையில், தம்பின் தொகுதிக்கு கிடைத்த அந்த நிதியிலிருந்து 11 ஆலயங்களுக்கு, 7 தமிழ்ப்பள்ளிகளுக்கு மற்றும் 300 பேருக்கு தீபாவளி சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டதாக முகமட் இஸாம் குறிப்பிட்டார்.