
புதுடில்லி, ஆக 6 – இந்திய துணையதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறவிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய துணையதிபர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஜகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுனர் மார்க்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆனால் துணையதிபர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். நியமன எம்.பிக்களும் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். மொத்தம் 788 எம்,பிக்கள் வாக்களிப்பார்கள். தற்போது இந்திய துணையதிபராக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் இம்மாதம் 10ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு தொடங்கும் . இன்று மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.