
ஈப்போ,நவ 27 – இந்திய மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கிய 10 லட்சம் ரிங்கிட் மானிய ஒதுக்கீடு முந்தைய தேசிய முன்னணி ஆட்சியில் நிலைநிறுத்த அவர்கள் தவறிவிட்ட நிலையில் மீண்டும் அந்நிதியை நிலைநிறுத்த முயற்சி மேற்கொள்ளப் போவதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் தெரிவித்தார். இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் மட்டுமின்றி அவர்களின் வாழ்வாதார நிலைக்கும் தனது பங்களிப்பும் திறனும் ஆக்கப்பூர்வமாக திகழும் என்றார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரா மாநில அரசாங்கத்தில் சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறை ஆகியவற்றோடு இந்திய நலன் விவகாரத்துறை தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன் தமிழ்ப்பள்ளிகள்,ஆலயம் மற்றும் இந்தியர்கள் எதிர்நோக்கும் புறம்போக்கு நிலவிவகாரங்கள் என பல்வேறு நிலைகளில் தீர்வுகாண தாம் ஆக்கப்பூர்வ செயல்பாட்டை முன்னெடுக்கவிருப்பதாக கூறினார்.
அதேவேளையில்,இந்தியர் நலன் பிரிவுக்கும் தாம் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றிருப்பதால் இம்மாநிலத்திலுள்ள 135 தமிழ்ப்பள்ளிகளின் சிக்கல்கள்,அவை எதிர்நோக்கும் நிலம் உட்பட இதர விடயங்களிலும் தனி கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார்.மேலும்,பள்ளி நிர்வாகம்,பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளிகளின் வாரியக்குழு என அனைத்து தரப்பும் தத்தம் பள்ளிகள் சார்ந்த சிக்கல்கள் மற்றும் தேவைகளுக்காக தன்னை அணுகுமாறும் கேட்டுக் கொண்டார்.
அதுபோல்,ஆலயப் பொறுப்பாளர்களும் சமயம் சார்ந்த இயக்கங்களும் நமது சமய வளர்ச்சிக்காகவும் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளுக்காகவும் தன்னை விரைந்து அணுகுமாறு கேட்டுக் கொண்ட அவர் பேரா மாநிலத்தில்
ஆலய சிக்கல்கள் எதுவும் இல்லாத சூழலை உருவாக்குவதே தனது இலக்கு என இன்று காலை ஈப்போவில் ஜாலான் லுமுட் – ஈப்போ சாலையில் உள்ள ஸ்ரீ சின்ன கருப்பு ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் கலத்துக்கொண்டப பின்னர் சிவநேசன் தெரிவித்தார்.
இதற்கிடையில்,பேரா மாநிலத்தில் இந்தியர்கள் வசிக்கும் புறம்போக்கு நில விவகாரங்களுக்கு தாம் தனி கவனம் செலுத்த போவதாக கூறிய சிவநேசன் இந்தியர்கள் எதிர்நோக்கும் இந்நில விவகாரத்திற்கு நீண்டக்காலமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதுசார்ந்த நடவடிக்கை குழுகளை தாம் சந்திக்க தயாராகவே இருப்பதாகவும் கூறினார்.