ஜாகார்த்தா, ஜனவரி-12, கிழக்கு இந்தோனீசியாவில் Ibu எரிமலை சனிக்கிழமை வெடித்துச் சிதறியது.
சூடான எரிமலைக் குழம்புகளை வெளியேற்றியதோடு, 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு புகையையும் சாம்பலையும் அது கக்கிக் வருகிறது.
வட மாலுக்கு பிரதேசத்தில் 700,000 பேர் வாழும் Halmahera தீவில் உள்ள இந்த Ibu எரிமலை, இந்தோனீசிய நேரப்பட்டி நேற்றிரவு 7.45 மணிக்கு வெடித்தது.
எரிமலைக் குழம்புகள் 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஆறுபோல ஓடுவதாக புவியியல் மையம் கூறியது.
எரிமலைக்கு மேலே தீப்பிழம்புகளும், அடர்த்தியான கரும்புகையும் வெளியேறுவது, எரிமலை கண்காணிப்பகத்தின் புகைப்படங்களில் தெரிகிறது.
இதுவரை மக்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை; என்றாலும் எரிமலையிலிருந்து 4 முதல் 5.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவர்கள் பாதுகாப்புக் கருதி காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எரிமலை சாம்பல் காற்றில் கலந்திருப்பதால் பாதுகாப்புக் கண்ணாடியும் சுவாசக் கவசமும் அணியுமாறு சுற்று வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உயிர் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இந்த Ibu எரிமலை இன்னமும் இரண்டாம் கட்ட உயர் எச்சரிக்கை அளவிலேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவில் தீவிரம் குறையாமலிருக்கும் எரிமலைகளில் ஒன்றான Ibu எரிமலை, கடந்தாண்டு மட்டுமே 200 முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.