
ஜகார்த்தா, நவம்பர் 21 – இந்தோனேசியா, தென் கலிமந்தானில், ஆடவர் ஒருவர் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது முதலாளி வளர்த்து வந்த புலிக்கு, உணவளிக்க சென்ற போது அந்த 27 வயது ஆடவர் அப்புலியால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அன்றாடம் அவர் அப்புலிக்கு உணவளிப்பது வழக்கமாகும்.
எனினும், கடந்த சனிக்கிழமை காலை மணி 10.30 வாக்கில், புலி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வீட்டிற்கு வெளியே மனைவியை காத்திருக்க சொல்லி விட்டு சென்றவர் மூன்று மணி நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
அதனால், சந்தேகமடைந்த அவரது மனைவி, இரகசிய பாதை வாயிலாக அவ்வீட்டிற்குள் சென்ற போது, கணவர் இரத்த வெள்ளத்தில் புலிக்கு இறையாகி கிடப்பதை கண்டுள்ளார்.
உடனடியாக, அவர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து, அச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததோடு, சம்பந்தப்பட்ட புலியின் உரிமையாளர் முறையான அனுமதியோடு அதனை வளர்கிறாரா? அச்சம்பவத்திற்கு கவனக்குறைவு காரணமா? ஆகிய கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.