ஜகார்த்தா, மே 3 – இந்தோனேசியா, வடக்கு சுலவேசியிலுள்ள, ருவாங் எரிமலையில் மீண்டும் வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அதன் அருகிலுள்ள, டகுலாண்டாங் தீவில் வசித்து வந்த ஒன்பதாயிரத்து 83 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
அதில் மூவாயிரத்து 364 பேர் உடனடியாக டகுலாண்டாங் தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட வேளை ; எஞ்சிய ஐயாயிரத்து 719 பேரை கட்டங் கட்டமாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்னும் மூன்று நாட்களில் அவர்கள் அனைவரும் முழுமையாக டகுலாண்டாங் தீவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது.
சிதாரோ மாவட்டத்தில், தனித் தீவாக தனித்து நிற்கும் ருவாங் எரிமலைக்கு அருகில், டகுலாண்டாங் தீவு அமைந்துள்ளது.
அத்தீவிலுள்ள மக்கள், அரசாங்க தனியார் கப்பல்கள் வாயிலாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் தற்காலிகமாக தங்கி இருக்க, டகுலாண்டாங் தீவிற்கு அருகிலுள்ள, மனாடோ மற்றும் சியாவ் ஆகிய தீவுகளில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.