Latestமலேசியா

இனத்துவேச – வந்தேறிகள் என அறிக்கைகளை வெளியிடுவதை மகாதீர் தவிர்க்க வேண்டும் சுங்கை பூலோ -எம்.பி ரமணன் சாடல்

கோலாலம்பூர், ஆக 31 – தேசிய ஒருமைப்பாட்டிற்கு எந்தவகையிலும் மதிப்பை கொண்டுவராத இன துவேச அறிக்கைகளை வெளியிடுவதை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு நாடு 66 ஆவது தேசிய தின கொண்டாட்டத்தை கொண்டாடும் இவ்வேளையில் மலாய்க்கார்கள் அல்லாத மலேசியர்களை ” வந்தேறிகள் ” என கூறுவதையும் டாக்டர் மகாதீர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மித்ராவின் சிறப்பு பணிக்குழுவின் தலைவரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார். தேசிய கல்வி முறையில் ஒரு பகுதியாக இருக்கும் தாய்மொழிப் பள்ளிகளை ரத்துச் செய்ய வேண்டும் என நிந்தனை அறிக்கையை மகாதீர் வெளியிட்டிருப்பது கவலையளிக்கக்கூடியதாக இருப்பதாக பி.கே.ஆர் தகவல் பிரிவின் துணைத்தலைவருமான ரமணன் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளைப் போன்று சீனப் பள்ளிகளும் நாட்டின் மேம்பாட்டில் பெரிய பங்கை ஆற்றி வருவதாக அவர் கூறினார்.

தயவு செய்து டாக்டர் மகாதீர் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை நேரடியாக சென்று பார்வையிட வேண்டும் என ரமணன் அழைப்பு விடுத்துள்ளார். இதன்வழி தாய்மொழிப் பள்ளிகள் அவர்களது பாடத் திட்டங்களில் தேசிய ஒற்றுமைக்கு ஆற்றிவரும் பங்கை அவர் நேரடியாக பார்வையிட முடியும். தாய்மொழிப் பள்ளிகளின் செயல்பாட்டினால் தமிழ் மற்றும் மெண்டரின் மொழிகளை மலேசியர்கள் கற்றுக்கொள்ள முடியும். நமது மாணவர்கள் மற்றமொழிகளை கற்றுக்கொள்வது அவர்களுக்கு மிகப்பெரிய சொத்தாகவும் இருக்க முடியும்.

தாய்மொழிப் பள்ளிகளுக்கு கூட்டரசு அரசாங்கம் நிதி வழங்கி வருகிறது, தனியார் பள்ளிகளைப் போன்று நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு சீன தொடக்கப் பள்ளிகளில் 100,000 த்திற்கும் மேற்பட்ட மலாய்க்கார, இந்திய மற்றும் இதர பூமிபுத்ரா மாணவர்களும் பயின்று வருகின்றனர். ஆறு ஆண்டுகள் தொடக்கக் கல்விக்கு மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்பிவைப்பதற்கு ஒரே காரணம் அவர்களது பிள்ளைகள் மெண்டரின் அல்லது தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பயில வேண்டும் என்பதுதான் . தாய்மொழிப் பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு சீர்குலைவை ஏற்படுத்தவில்லை. டாக்டர் மகாதீர் போன்ற அரசியல்வாதிகள்தான் தேசிய ஒன்றுமைக்கு பிளவை ஏற்படுத்துகின்றனர் என்றும் ரமணன் தெரிவித்தார்.

சீனாவும் இந்தியாவும் பெரிய பொருளாதார நாடாக இருக்கின்றன. நமது பிள்ளைகள் மெண்டரின் மற்றும் தமிழ் மொழியில் பேசக்கூடிய ஆற்றலை கொண்டிருந்தால் அவர்கள் வேலை வாய்ப்பு சந்தையில் சிறந்த வாய்ப்புக்களையும் பெறமுடியும் என ரமணன் தெரிவித்தார். நமது பள்ளிகளில் பகாசா மலேசியாவிற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. செய்தி ரீதியில் தாம் கவனிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்தையும் இன ரீதியில் டாக்டர் மகாதீர் பார்பதுதான் துரதிஷ்டமாகும். இனங்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக மலேசியர்களை ஒன்றினைக்கும் பங்கை 98 வயதுடைய மகாதீர் ஆற்ற வேண்டும் என ரமணன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!