சென்னை, நவம்பர்-11 – பிரபல முன்னணி நடிகர் அஜீத்குமாரைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனும் சினிமா பட்டப் பெயரைத் துறந்துள்ளார்.
இனி தன்னை யாரும் ‘உலகநாயகன்’ என அழைக்க வேண்டாமென, தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் கமல் அறிவித்திருக்கிறார்.
கமல்ஹாசன், கமல் அல்லது KH என்று சுருக்கமாக குறிப்பிட்டாலே போதுமென, தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் நீண்ட விளக்கமளித்துள்ளார்.
கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை; கற்றது கைமண் அளவு என்பதை நன்குணர்ந்து நீண்ட யோசனைக்குப் பிறகு அம்முடிவுக்கு வந்திருப்பதாக அவர் சொன்னார்.
பட்டங்கள், அடைமொழிகள் வழங்கியவர்களுக்கு மரியாதை குறைவு வராத வண்ணமிருக்கவும் அம்முடிவுக்கு வந்திருப்பதாக கமல் தெரிவித்தார்.
இந்நிலையில், ‘உலக நாயகன்’ என்றழைத்து இத்தனை காலமாக இரசிகர்கள் தன் மேல் காட்டி வரும் அன்புக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இது கமலின் தீவிர இரசிகர்கள் மட்டுமின்றி, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகராக அவரை கொண்டாடும் நடுநிலை இரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன் நடிகர் அஜீத், தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாமென அவரது இரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மாறாக, அஜீத்குமார், அஜீத் அல்லது AK என்று அழைத்தாலே போதுமென அவர் சொன்னார்.