
வாஷிங்டன், ஏப்ரல்- 5 – உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க், மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்து கடுமையானதொரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதாவது மனித உருவில் இருக்கும் ரோபோக்கள், விரைவில் மனிதர்களின் எண்ணிக்கையை மிஞ்சிவிடுமாம்; இது அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிகழலாம் என SpaceX நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியுமான அவர் கருதுகிறார்.
ரோபோக்களின் ‘எழுச்சி’ இதுவரை அறிவியல் புனைகதைகளில் மட்டுமே பேசப்பட்டு வந்தது.
ஆனால், கிட்டத்தட்ட மனிதர்கள் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்யக்கூடிய ரோபோக்களை நிறுவனங்கள் தயாரிப்பதால், மனிதகுலம் மீதான அதன் அச்சுறுத்தல் உண்மையானதாக மாறி வருவதாகவே தெரிகிறது.
இலோன் மாஸ்க்கும், தன் பங்குக்கு Tesla Bot (AKA Optimus) எனப்படும் மனித ரோபோக்களை உருவாக்கி வருகிறார்.
அவற்றின் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்; தவிர, Opitimus-சை ‘உலகம் கண்ட மாபெரும் தயாரிப்பு’ என முத்திரையும் குத்தியுள்ளார்.
ரோபோ புரட்சியானது, வரும் ஆண்டுகளில் விஷயங்கள் செயல்படும் விதத்தை மாற்றும் என்று இலோன் மாஸ்க் உறுதியாக நம்புகிறார்.
நீண்ட காலத்திற்கு, மனித ரோபோக்களின் விகிதம் ஒன்றுக்கு ஒன்று என்பதை விட அதிகமாக இருக்கும்; ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனித ரோபோக்கள் இருக்கலாம், ஒருவேளை 10 ரோபோக்கள் கூட இருக்கலாம் என அந்த கோடீஸ்வரர் நினைக்கிறார்.
ஏற்கனவே அறிவார்ந்த இயந்திரங்கள் மற்றும் AI அதி நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதர்கள் அரண்டு போயுள்ளனர்.
இந்நிலையில், இலோன் மாஸ்க்கின் கூறுப்படி உலகில் 10 பில்லியனுக்கும் அதிகமான மனித ரோபோக்கள் இருக்குமாம்; இது நினைத்தே பார்க்க முடியாத ஒரு பயங்கரமான சூழ்நிலையாகும்…
முதல் Optimus ரோபோ 2021-ல் வெளியிடப்பட்ட நிலையில், இப்போது இவ்வாண்டு இறுதிக்குள் Tesla 10,000 மனித ரோபோக்களை உற்பத்தி செய்ய இலக்குக் கொண்டுள்ளது.
புதிய மாடல்களும் சிறப்பாக உள்ளன; மனிதர்கள் எப்படி நடக்கிறார்களோ அதே போல் கனக்கச்சிதமாக இந்த Optimus ரோபோக்களும் நடக்கின்றன.
இலோன் மாஸ்க்கின் Optimus ரோபோக்கள், மேம்பட்ட AI-யால் இயக்கப்படுகின்றன; இவற்றால் நடக்கவும், படிக்கட்டுகளில் ஏறவும், பொருட்களைத் தூக்கவும், எடுத்துச் செல்லவும், அதே போல் பொருட்களைத் தன்னியக்கமாகக் கையாளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரோபோக்களின் விலையை மாஸ்க் $20,000-$30,000 என நிர்ணயித்துள்ளார்.
விரைவில் சாதாரண மக்களும் அவற்றை சொந்தமாக்கிக் கொள்வார்கள் என மாஸ்க் நம்புகிறார்.