
கோலாலம்பூர், நவ 20 – இன்று காலையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளாத காரணத்தினால் நாடாளுமன்றம் அமைதியாக இருந்தது. கேள்வி பதில் அங்கத்தின்போது தேசிய முன்னணி தம்பின் உறுப்பினர் டத்தோ முஹம்மது இஷா இடைமறித்து இந்த விவகாரத்தை எழுப்பினார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட கூட்டத்தில் கலந்துகொள்ளவதற்கு வரவில்லையென நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் இல்லாததால் கேள்வி பதில் அங்கத்தின்போது கூடுதலாக மூன்று கேள்விகளுக்கு அனுமதியளிப்பதாக சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்கான கேள்விகள் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒதுக்கப்பட்டிருந்தன. நாடாளுமன்றத்தில் அவர்கள் பங்கேற்காத நிலையில் அந்த கேள்விகளை எவரும் கேட்கவில்லை என்பதோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில்களையும் தெரிவிக்க முடியவில்லை. இன்று காலையில் புத்ரா ஜெயாவில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றதாக கூறப்பட்டது.