
கோலாலம்பூர், டிச 27 – உலகில் மணுக்குலத்திற்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி லட்சக்கணக்கானோர் இறக்க காரணமான இயற்கை பேரிடர் சுனாமி ஆழி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் கடற்பகுதியில் அதிகாலை வேளையில் ரெக்டர் கருவியில் 9.1 முதல் 9.3 அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட 30 மீட்டர் உயரத்தைக் கொண்ட ஆழிப்பேரலையால் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை,மாலத்தீவுகள் உட்பட 14 நாடுகள் பாதிக்கப்பட்டன. இந்த அசம்பாவிதத்திற்குப் பிறகுதான் சுனாமி என்ற வார்த்தை இருப்பதே பலருக்கும் தெரிய வந்தது. மலேசியாவில் கெடா மற்றும் பினாங்கில் சுனாமி 137 பேரை பலி கொண்டதோடு பல பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியது. இந்தோனோசியாவில் ஆச்சேவில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்ததோடு கிட்டத்தட்ட 40,000 பேர் காணாமல் போயினர். இந்தியாவில் தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்னி போன்ற மாவட்டங்களிலும் சுனாமி பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படத்தியது. இந்த அனுபவத்திற்குப் பிறகு, கடலில் நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம் சுனாமி எச்சரிக்கை முன்கூட்டியே விடுக்கப்படுகிறது. இருந்த போதிலும், 2004-ஆம் ஆண்டின் சுனாமி தாக்கம் பலரது மனதில் அகல சம்பவமாகவுன் அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவமாகவும் கருதப்படுகிறது.